விஜய் திருச்சியின் வளர்ச்சியை பார்க்கலையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி
திருச்சியின் வளர்ச்சி குறித்த விஜய் பேச்சிற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் திருச்சி பிரச்சாரம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை நேற்று திருச்சியில் இருந்து தொடங்கினார்.
திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த அவரை காண, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால், திருச்சி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய விஜய், "திருச்சில தொடங்குனா திருப்பு முனையா அமையும். அதுக்கு உதாரணமா அண்ணா அவர்கள் 1956 ஆம் ஆண்டு தேர்தல்ல நிக்கனும்னு நினைச்சது திருச்சிலதான். எம்ஜிஆர் 1974ஆம் ஆண்டு முதல் மாநாடு நடத்துனது திருச்சிதான்.
2021 சட்டமன்றத் தேர்தல்ல திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துச்சி. அதுல எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்காங்க?
டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?
நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை. 2 அமைச்சர்கள் இருந்தும் திருச்சியில் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. " என பேசினார்.
அன்பில் மகேஷ் பதிலடி
இந்நிலையில் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், "விஜய் அவர்கள் கேக்கலையா, கேக்கலையா என்று பேசியதை இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்தேன்.
கேக்கலை, கேக்கலை என்று சொல்வதை விட திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை என்று தெரிகிறது.
திருச்சி மாவட்டத்தில் நான் மற்றும் அமைச்சர் நேரு தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். திருவெறும்பூர் அருகே மாதிரி பள்ளி, ஒலிம்பிக் அகாடமி, பஞ்சபூர் பேருந்து நிலையம் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன.
2ஆம் தலைநகரத்திற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக்கின்ற அளவிற்கு திருச்சியில் பணிகளை செய்துள்ளோம். திருச்சி மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் எதுவும் செய்யப்படவில்லை என்ற விஜய்யின் பொதுவான குற்றச்சாட்டை மக்கள் ஏற்க மாட்டார்கள்." என தெரிவித்துள்ளார்.