ஒழுங்கு மரியாதையா நிரூபிக்கலைன்னா ரூ.500 கோடி கட்டணும் - அண்ணாமலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் உண்மை என்று நிரூப்பிக்கவில்லை என்றால் ரூ.500 கோடி கட்ட வேண்டும் என்று திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
எனக்கு 1,023 கோடி சொத்து இருக்குனு அண்ணாமலை நிரூபிக்கணும்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி திருவெறும்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினார்.

அப்போது பேசிய அவர், “நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 10 வருடமாக தமிழகத்தை ஆண்டவர்கள், தமிழகத்தை பாலைவனமாக ஆக்கி நம்மிடம் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த பாலைவனத்தை இன்று பண்படுத்தியிருப்பதோடு, இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் என்ற பெயரை நாம் பெற்றிருக்கிறோம்.
ஆனா, புதுசா மாநிலத் தலைவர் ஒருத்தரு ஒரு பட்டியலை போட்ருக்காரு. சினிமாவுல ஒரு பழைய ஜோக் வருமே ஆயிரம்… ரெண்டாயிரம்… மூணாயிரம்… பிம்பிளிக்கா பிஸ்கோத்துன்னு… அதேமாதிரி ஒருத்தர், ‘அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு 1,023 கோடி ரூபாய் சொத்து இருக்கு’ன்னு சொல்லியிருக்கார்.

‘ஒழுங்கு மரியாதையா, நிரூபிக்கலைன்னா, 500 கோடி ரூபாய் அபராதம் கட்டணும்’னு தலைமைக் கழகத்துல இருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுத்துருக்காங்க.
எனக்கு 1023 கோடி ரூபாய் சொத்து இருக்குன்னு சொல்ற… நீயே அதை வித்துக் கொடுத்துரு. தமிழ்நாட்டுல 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இருக்கு.
அந்தக் காசை வச்சி ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் இரண்டரை லட்ச ரூபாய்க்கு நான் புத்தகத்தை வாங்கிக் கொடுத்துடுறேன். எது நல்லது, எது கெட்டதுன்னு மாணவர்கள் படிச்சி தெரிஞ்சுக்குவாங்க...
அரசியல் காமெடியன்களை முதல்வர் பார்த்துக்கொள்வார்
ஏதோ வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி மக்களை திசை திருப்பணும், திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னு இப்டியெல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்க.
இதுபோன்ற நபர்களுக்கு பதில் சொல்லி உங்களுடைய நேரத்தை வீணடிக்காதீங்க. மக்களுக்கு பணியாற்றுகிற வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்க.
இந்த மாதிரியான அரசியல் காமெடியன்களை எல்லாம் நான் பார்த்துக்குறேன்’ என எங்களுடைய முதல்வர் சொல்லியிருக்கிறார்.
பள்ளிக்கல்வித் துறையை மேம்படுத்த வேண்டுமென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நாங்க ஒழுங்கா பணி செய்யலைன்னா எங்களை தூக்கி எறியக்கூடிய அதிகாரம் உங்களுக்கு மட்டும் தான் உண்டு” என்று கூறினார்.