பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை? - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. வரும் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், மார்ச் மாதத்திலிருந்தே வெயில் கோரத்தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
வெயில் அளவு அதிகரிக்க தொடங்கியதால் பகலில் மக்கள் நடமாட்டம் குறைய தொடங்கி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பகலில் சுட்டெரிக்கும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரித்துள்ளது.
வெயில் காலம் தொடங்கியதால் மாவட்டத்தில் ஆங்காங்கே பழச்சாறு கடைகள், கரும்புச்சாறு, கேழ்வரகு கூழ், தர்பூசணி, முலாம்பழம் போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்தியாவில் 122 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதம் முதல் அதிகபட்சமாக வெயில் அடித்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், கொரோனா காலத்தில் பள்ளிகள் இயக்காததால் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.