அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
மழையால் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல்
ஃபெஞ்சல் புயலால் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தது.
இதனால் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. டிசம்பர் 9 ஆம் தேதி அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அரையாண்டு தேர்வு
மழை வெள்ளம் வீட்டின் உள்ளே புகுந்ததில் புத்தகங்கள் சேதமடைந்ததால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிரமங்கள் உள்ளதால் தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதனையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட 15 மாவட்ட கல்வி அலுவலர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளி கட்டிடங்களின் தற்போதைய நிலை, மழை வெள்ளத்தால் ஆவணங்கள் சேதமடைந்துள்ளதா என கேட்டறிந்ததோடு, பள்ளியில் விஷ பூச்சிகள் இல்லை என உறுதி செய்ய வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 2ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. மழை பாதிப்பால் பள்ளிகளில் அரையாண்டு செய்முறை தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளதால் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தி முடிக்க கூறியுள்ளோம்.
9ஆம் தேதி தொடங்க உள்ள அரையாண்டு தேர்வு தேதியில் மாற்றம் இல்லை. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், டிசம்பர் 9ஆம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், தொடர்ந்து நீர் தேங்கியிருந்தால் ஜனவரி மாதம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.