தேர்வே வேண்டாமா? ஃபெயில் செய்ய யார் சொன்னாங்க - CBSE சர்ச்சைக்கு பாஜக புள்ளிகள் விளக்கம்
CBSE சர்ச்சைக்கு நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
CBSE சர்ச்சை
சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி விகிதத்திற்கு குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்துப் பள்ளிகளுக்கும் மார்ச் 18 ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற நிலை இருந்து வந்த நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த நடைமுறை தற்போது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.
இதனால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கும் சிபிஎஸ்இ நடவடிக்கையை எதிர்த்து பெற்றோர் குரல் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் பள்ளி இடைநிற்றலை அதிகப்படுத்தும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்தார்.
பாஜக தலைவர்கள் விளக்கம்
தற்போது சிபிஎஸ்இ தேர்வு முறையில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஃபெயில் செய்ய யார் சொன்னது. அப்படி ஒன்றும் எதுவும் இல்லை. மத்திய அரசு எது சொன்னாலும் மாநில அரசு அதற்கு எதிர்ப்பாகத்தான் எதையாவது சொல்லும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் அன்பில் மகேஸ் சொல்வதைப் பார்த்தால், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தேவையில்லையே. எல்லோரையும் பாஸ் செய்துவிட்டு செல்லலாமே. அன்பில் மகேஸ் ஒட்டுமொத்த தேர்வுகளை வேண்டாம் என்று சொல்கிறாரா. போட்டி தேர்வுகளுக்கு என்ன அளவுகோல் வைப்பது.
குழந்தைகள் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக.. படிக்கிறார்களோ அல்லது படிக்கவில்லையோ அனைவரையும் பாஸ் செய்து விடுகிறார்கள். இது மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.