திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு

trichymayoranbazhagan tnmayorelections trichymayordmk
By Swetha Subash Mar 04, 2022 06:40 AM GMT
Report

திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் இருபத்தி ஆறு ஆண்டுகால திமுகவின் ஆசை நிறைவேறியது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்று 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்தது.

இதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் மார்ச் 2-ம் தேதி திருச்சி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 65 மாமன்ற உறுப்பினர்கள்,

திருச்சி மாநகராட்சி ஆணையர் முஜிபூர் ரகுமான் முன்னிலையில் உறுதிமொழியை ஏற்று பதவியேற்றுக்கொண்டனர்.

திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு | Anbazhagan Elected As Trichy Mayor

திருச்சி மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக மு.அன்பழகனும், துணை மேயர் வேட்பாளராக திவ்யாவும் திமுக தலைமை கழகம் அறிவித்தது.

இதனை தொடர்ந்து மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் இன்று திருச்சி மாநகராட்சியில் நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை 09.30 மணி அளவில் 65 மாமன்ற உறுப்பினர்களும் கூட்ட அரங்கில் ஒன்று கூடினர்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்தார்.

ஆனால் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் 27 வார்டில் வெற்றி பெற்ற அன்பழகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என மாநகராட்சி ஆணையர் அறிவித்தார் .

திருச்சி மாநகராட்சி மேயராக மு.அன்பழகன் போட்டியின்றி தேர்வு | Anbazhagan Elected As Trichy Mayor

தொடர்ந்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மேயர் அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து கொடுத்தனர்.

பின்னர் மேயர் உடையை அன்பழகன் அணிவித்து அவரை மேயர் இருக்கையில் அமைச்சர்கள் நேரு, அமைச்சர் மகேஷ் அமர வைத்தனர்.

பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,

கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் மேயர் அன்பழகனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், “குப்பை இல்லாத மாநகராட்சியாக திருச்சியை உருவாக்குவதே எனது முதல் பணி.

மேயர் பதவியாக கருதாமல் பொறுப்பாக கருதுவேன். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி மாநகராட்சியை உருவாக்குவேன்” என்றார்.