அந்த நடிகை போட்ற டிரஸ் சரியில்லை - பிரபல வில்லன் நடிகர் சர்ச்சைப் பேச்சு
நடிகை அனசுயா பரத்வாஜின் ஆடை குறித்து மூத்த நடிகர் கோட்டா சீனிவாசராவ் தெரிவித்த கருத்துக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகராக இருக்கும் கோட்டா சீனிவாசராவ் தமிழில் ‘சாமி’, ‘திருப்பாச்சி’, ‘சகுனி’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு கோட்டா சீனிவாசராவ் தற்போதைய காமெடி நிகழ்ச்சிகள் ஒரு சர்க்கஸ் போல இருப்பதாகவும், பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க மிகவும் சிரமப்படுவதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினியும், நடிகையுமான அனசுயா பரத்வாஜைக் குறிப்பிட்டு அவர் மிகவும் திறமையான நடிகை எனவும், ஆனால் அவர் ஆடை அணியும் விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறினார்.
அவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. பலரும் கோட்டா சீனிவாசராவ் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கோட்டா சீனிவாசராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை அனசுயா பரத்வாஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் மூத்த கலைஞர் ஒருவர் கூறிய சில கருத்துகளை இப்போதுதான் பார்த்தேன். நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது கவலைக்குரிய விஷயமாக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது. அனுபவம் வாய்ந்த ஒருவர் மிகக் கீழ்மையான முறையில் கருத்து தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆடை என்பது முழுக்க முழுக்க ஒருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அது ஒரு தொழில்முறைத் தேர்வாகவும் இருக்கலாம். ஆனாலும், தனிப்பட்ட விஷயம்தான்.
மேலும் மது அருந்துவதையோ அல்லது மோசமான ஆடைகளை அணிவதையோ அல்லது பெண்களைத் தவறாக நடத்துவதையோ அல்லது அவமானப்படுத்துவதையோ அவர்கள் புகழ்வார்களா? அதிசயம்தான். என்னைப் போன்ற ஒரு திருமணமான பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் தாய் இன்னும் வேலை செய்கிறார். ஆணாதிக்க நெறிமுறைகளைக் கேள்வி கேட்கும், உங்களை அச்சுறுத்தும் கருத்துடைய தனது தொழிலில் வெற்றி பெற முயல்கிறார்.
பின்னர் நீங்கள் பொதுவில் கருத்துகளைச் சொல்வதை விட நீங்களே சமாளிக்க வேண்டும். திருமணமாகி, குழந்தைகள் பெற்றும் நடிகைகளுடன் திரையில் காதல் செய்து, சட்டையில்லாத தனது உடலமைப்பைக் காட்டும் இந்த நட்சத்திரங்கள் அனைவரையும் ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?''. இவ்வாறு அனசுயா கேள்வி எழுப்பியுள்ளார்.