No நயினார்; No தமிழிசை - பாஜக தலைவர் ரேசில் புதிய முகம் நீயா நானா கனெக்ஷன்
தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என அண்ணாமலை அறிவிக்கும் முன்பே, பலரின் பெயர்கள் அடிபட்டு வந்தன. அவரது அறிவிப்பைத் தொடர்ந்து பரிசீலனை பட்டியலில் இருக்கிறது தினமும் ஒரு பெயர் உலவத் தொடங்கியுள்ளது.
அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்திருக்கும் பெயர் ஆனந்தன் அய்யாசாமி. பாஜகவிற்கு நெருக்கமான தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவாளராக அறியப்படுபவர் ஆனந்தன் அய்யாசாமி. ஒரு வகையில் அண்ணாமலையின் கதையும் ஆனந்தன் அய்யாசாமியும் கதையும் ஒன்றுதான்.
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, திடீரென ஒருநாள் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்து விவசாயம் பார்க்கத் தொடங்கினார். அப்படியே பாஜகவில் இணைந்தவர் இப்போது அதன் மாநிலத் தலைவராக இருக்கிறார்.
ஆனந்தன் அய்யாசாமி பொறியியல் படித்து விட்டு இண்டெல் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். ஒரு நல்ல நாளில் வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்து சமூக சேவைகளை செய்து வந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தவர், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதி வேட்பாளராக களமிறங்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு சென்றதால் அவர் போட்டியிடவில்லை. தமிழ்நாடு பாஜகவின் ஸ்டார்ட் அப் பிரிவின் தலைவராக இருக்கும் ஆனந்தன் அய்யாசாமிக்கு மாநிலத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
பாஜகவை பொறுத்தவரை சில சர்ப்ரைஸ் முடிவுகளுக்கு பெயர் போனது. 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு பாஜக தலைவர் பதவிக்கு பல பெயர்கள் அடிபட்டன. ஆனால் 6 மாதங்கள் கழித்து எல்லா சீனியர்களையும் ஒதுக்கி விட்டு எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். அதே பாணியில் இப்போதும் ஆனந்தன் அய்யாசாமிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனந்தன் அய்யாசாமியை நியமிக்கப்படுவதில் சமூகரீதியிலான கணக்குகளில் இருக்கின்றன. வட இந்தியாவில் பாஜகவிற்கு பெரிய அளவில் கைகொடுத்த Social Engineeringஐ தமிழ்நாட்டிலும் பாஜக கையிலெடுத்துப் பார்த்தது. பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றாலும், சில சமூகங்களை பாஜகவின் வாக்கு வங்கியாக மாற்ற அது கைகொடுத்தது. தேவேந்திர குல வேளாளர் சமூக மாநாட்டில் அமித்ஷா கலந்து கொண்டது, அதன் தொடர்ச்சியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது என நிறைய விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன் நீட்சியாகவே ஆனந்தன் அய்யாசாமிக்கான வாய்ப்பையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாடு அரசியலில் அதிமுகவை ரீப்ளேஸ் செய்வது என்ற பாஜக அஜெண்டாவிற்கு தென்மாவட்டத்தில் வலுவாவதற்கான பணிகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆனந்தன் அய்யாசாமியை தலைவராக நியமிப்பது பாஜகவிற்கு இன்னும் கைகொடுக்க வாய்ப்பிருக்கிறது.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் மும்மொழிக் கொள்கை தொடர்பான நிகழ்வு படப்பிடிப்பு நடத்தி ஒளிபரப்பாகாமல் தடுக்கப்பட்டது. அதில் ஆனந்தன் அய்யாசாமியும் கலந்து கொண்டிருந்தார். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சில தகவல் பிழையான கருத்துகளை ஆனந்தன் அய்யாசாமி பேசி, அதனை நெறியாளரும் பங்கேற்பாளர்களும் அம்பலப்படுத்தியதாக கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்து தெரிவித்தனர். அடுத்த பாஜக தலைவருக்கான போட்டியில் இருப்பவர் ஒரு வெகுஜன தொலைக்காட்சியில் அவமானப்படக் கூடாது என்பதற்காகவே அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனந்தன் அய்யாசாமிக்கு பதவி உறுதியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனந்தன் அய்யாசாமி அடுத்த தலைவராக்கப்படுவாரா என்பது அமித்ஷாவின் கையில் இருக்கிறது. அமித்ஷாவின் தமிழ்நாட்டுப் பயணத்திற்கு பிறகு பாஜக தலைவர் யார் என்ற கேள்விக்கான பதில் தெளிவாகலாம்.