அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும் : ஆனந்த் மகிந்திரா அறிவிப்பு

Anand Mahindra
By Nandhini Jun 20, 2022 05:19 AM GMT
Report

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் 4 ஆண்டுகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அக்னி பாத் திட்டம்

இந்திய ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 6 மாத பயிற்சிக்குப் பின்னர் 4 ஆண்டுகள் மட்டுமே இவர்கள் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் பணிக்காலம் முடிந்து தேர்வு செய்யப்படும் கடும் எதிர்ப்பு 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வன்முறை வெடித்துள்ளது.

சென்னையில் போராட்டம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அக்னி பாதை ராணுவ ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமைச் செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆரணி, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலிருந்து வந்த இளைஞர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினார்கள்.

உ.பி.யில் 260 பேர் கைது

பீகாரில் ராணுவ வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உத்தரப்பிரதேசத்திலும் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உத்தர பிரதேசத்தில் உள்ள பல்லியா ரயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. 'அக்னி பாத்' திட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வீச்சு, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்ட 260 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாரத் பந்த்

இன்று பாரத் பந்த் நடத்தவும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னி வீரர்களுக்கு மகிந்திரா நிறுவனத்தில் நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும் : ஆனந்த் மகிந்திரா அறிவிப்பு | Anand Mahindra Agni Player

ஆனந்த் மகிந்திரா ஆதரவு

இந்நிலையில், அக்னி பாத்த திட்டத்தில் பணியாற்றி முடித்து வரும் இளைஞர்களுக்கு மகிந்திரா நிறுவனம் பணி வழங்கத் தயாராக உள்ளது என்று மகிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், #அக்னிபத் திட்டத்தை சுற்றி நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறினேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். சிறந்த அக்னிவீரர்கள் ஒழுக்கம் மற்றும் திறன்களின் அடிப்படை வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது என்று பதிவிட்டுள்ளார்.