1 ரூபாய் இட்லி பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த ஆனந்த் மகேந்திரா - வைரலாகும் வீடியோ
கோவை, ஆலாந்துறை வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் (85). இவர் 30 வருடங்களாக இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
முதலில் ரூ.25 பைசாக்கு இவர் இட்லி விற்று வந்தார். பிறகு ஏழை, எளிய மக்களுக்காக ரூ. 1க்கு இட்லி விற்று வருகிறார். கோவை சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் ரூ.1 க்கு இட்லி வாங்கி சாப்பிட்டு வந்தனர்.
இதனால், இட்லி பாட்டி மிகவும் பிரபலமடைந்தார். உதவிக்கு யாரும் இல்லாமல் தனி ஆளாக 30 வருஷமாக இந்த இட்லி கடையை கமலாத்தாள் நடத்தி வருகிறார்.
1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் கமலாத்தாள் பாட்டியின் சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது சேவையை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சமையல் எரிவாயு அடுப்பு, கிரைண்டர், மிக்சி, ஆகியவற்றை கமலாத்தாளுக்கு ஆனந்த் மஹேந்திரா வழங்கினார்.
இந்நிலையில், இட்லி பாட்டி ஆனந்த் மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புகழிடம் எனக்கு ஒரு வீடு கட்டி தாருங்கள் என்று பாட்டி கோரிக்கை வைத்தார்.
இது குறித்து அறிந்த ஆனந்த் மஹிந்திரா வீடு கட்டி தருவதாக வாக்குறுதி கொடுத்தார். மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் 2.5 லட்ச ரூபாய் செலவில் 1.75 சென்ட் நிலம் வாங்கி, கமலாத்தாள் பெயரில் பதிவு செய்து, ஆவணத்தை அவரிடம் வழங்கியது.
பின்னர், மஹேந்திரா நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதியன்று 7 லட்சம் செலவில் பூமி பூஜை போட்டு கட்டுமானப் பணிகளை நடித்தி முடித்தனர்.
இந்நிலையில், நேற்று மஹிந்திரா குழுமத்தின் திருப்பூர் முதன்மை செயல் அதிகாரி இட்லி பாட்டி கமலாத்தாளிடம் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான அன்னையர் தினத்தை முன்னிட்டு சாவியை வழங்கினார். இது குறித்து மஹிந்திரா குழுமத்தின் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், அன்னையர் தினத்தன்று இட்லி அம்மாவுக்கு பரிசளிப்பதற்கு சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்ததற்காக எங்கள் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் அவர் ஒரு தாயின் நற்பண்புகளின் உருவகம்: வளர்ப்பு, அக்கறை மற்றும் தன்னலமற்றவர். அவளையும் அவளுடைய பணியையும் ஆதரிக்கும் பாக்கியம். உங்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்க தன் வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்க்கு, சிறிது சந்தோஷம் கொடுக்கும் முயற்சியை விட வேறு ஒரு பெரிய சந்தோஷம் இல்லை. pic.twitter.com/KCN7urkSTG
— anand mahindra (@anandmahindra) May 8, 2022