பள்ளிக்கூடம் பக்கமே போனதில்ல; ஸ்கூட்டியை ஜீப்பாக்கிய தேனி முதியவர் - குவியும் பாராட்டு!
முதியவர் ஒருவர் தனது ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்து சிறிய ஜீப் போல மாற்றியுள்ளார்
சின்ன ஜீப்
தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (60). இவர் தனது ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை மாடிஃபிகேஷன் செய்து சிறிய ஜீப் போல மாற்றியுள்ளார்.
இதனை அவரே தனது சொந்த முயற்சியில் மிகவும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளார். அந்த சின்ன ஜீப்பின் பின் பகுதியில் மண்வெட்டி, களை கொத்து, அரிவாள் உள்ளிட்ட பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அந்த சின்ன ஜீப்பில் ஜாலியாக வலம்வரும் ஈஸ்வரனை வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.
மேலும், பள்ளிக் கூடமே செல்லாத இந்த பெரியவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சின்ன ஜீப் உருவாக்கியுள்ளதைத் தேனி மக்கள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ஈஸ்வரன் கூறுகையில் "30 வருடத்திற்கும் மேலாக பட்டறை தொழில் செய்து வருகிறேன்.
குவியும் பாராட்டு
என் பட்டறையில் செய்யும் பொருட்களை நானே எடுத்துச் சென்று சுற்றுவட்டாரத்தில் வியாபாரம் செய்கிறேன். அதற்காக வாடகை வண்டியில் சென்றால் அதிகம் செலவாகிறது.
எனவே பத்து வருடம் முன்பு ஆட்டோ போன்ற ஒரு வண்டி செய்தேன். அது சரியாக அமையவில்லை . பின்னர் அடுத்தடுத்து 3 வண்டிகள் செய்து பார்த்தேன். கடைசியா கடந்த 30 நாட்களுக்கு முன்னர் ஸ்கூட்டி பெப் வண்டியை ஜீப் போல மாற்றினேன். நல்லபடியா வந்துவிட்டது.
எல்லாம் என்னுடைய அனுமானம்தான். இதைச் செய்யவே 40,000 ரூபாய் செலவானது . இன்னும் தேவையான பொருட்கள் கிடைத்தால் வண்டியை மேலும் பிரம்மாண்டமாக்கி விடலாம்"என்றார். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர்களுக்கே சவால் விடும் அளவிற்கு இந்த சின்ன ஜீப்பை உருவாக்கிய பெரியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.