இங்கே வா..ஷுவை எடுத்துட்டு போ...உதவியாளருக்கு உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர் - சர்ச்சையான வீடியோ
உதவியாளரை அழைத்து தனது காலணியை எடுக்கச் சொன்ன கள்ளக்குறிச்சி ஆட்சியரின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சித்திரைப் பெருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் ஷ்ரவன்குமார். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழாவில் 16-ம் நாள் அழுகளம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவுக்காக மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே, சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வருவர்.
சர்ச்சையில் சிக்கிய மாவட்ட ஆட்சியர்
இதனிடையே கோயில் திருவிழாவின் பணிகளை ஆய்வு செய்வதற்காக, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு இன்று நேரில் சென்றார் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார்.
அப்போது, கோயிலுக்குள் செல்ல ஆட்சியர் முற்பட்டார். அப்போது, உதவியாளரை அழைத்து தனது காலணியை ஆட்சியர் எடுக்கச் சொன்னார்.
விரைந்து வந்த உதவியாளர் ஆட்சியரின் காலணியை எடுத்துச்சென்றார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.