தோனிக்காக வீட்டையே மாற்றிய தீவிர ரசிகர்; தூக்கிட்டு தற்கொலை - என்ன நடந்தது..?
எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த அரங்கூர் பகுதியை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (34). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
கோபிகிருஷ்ணன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஆவார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிறத்தில் தனது வீட்டை மாற்றி பிரபலமடைந்தார்.
மேலும் தோனியின் படங்களும் தனது வீடு முழுவதும் வரைந்து வைத்துள்ளார். இதனால் பலரும் அவரின் வீட்டை பார்வையிடுகின்றனர்.
விசாரணை
இந்நிலையில் கோபிகிருஷ்ணன் இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் கோபி கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலிலிருந்த கோபிகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.