அமுல் பால் விற்பனை; ஆவினுக்கு விழுந்த இடி - பரபரப்பு அறிக்கை!
அமுல் நிறுவன பால் விற்பனை குறித்து ஆவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமுல் விற்பனை
ஆவின் நிறுவனம் சார்பில் தினமும் 26 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ப்ளூ ஆகிய பாக்கெட்டுகளில் விற்பனையாகிறது.
பால் பொருட்கள் மட்டுமல்லாமல் வெண்ணெய், நெய், தயிர், மோர் உள்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில், கூட்டுறவு நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் விளக்கம்
ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுவது நடைமுறையில் இல்லை.
இந்நிலையில், 2 மாதங்களில் சித்தூர் அமுல் பால் பண்ணையில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பால் விற்பனையை தொடங்க அமுல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.