தாலிபானிடம் ஒருபோதும் மண்டியிட மாட்டேன் - துணை அதிபரின் அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு துணை அதிபர் அம்ருல்லா சாலே எழுதியுள்ள உருக்கமான கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கு தலிபான் அமைப்பைச் சேர்ந்த முல்லா முகமது ஹசன் அகுந்த் அந்நாட்டின் செயல் பிரதமராகவும், துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் செயல் துணை பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதேசமயம் தாலிபான்களுக்கு எதிராக நார்தன் அலயன்ஸ் குழுவை சேர்ந்த கொரில்லா போராளிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் துணை அதிபரான அம்ருல்லா சாலே பஞ்சசீர் மலை பகுதியில்தான் தாலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார். தற்போது தலைமறைவாகிவிட்ட நிலையில் இவரின் இருப்பிடம் எங்கே என்று தெரியாமல் உள்ளது. இதனிடையே டெய்லி மெயில் ஊடகத்திற்கு இவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் தாலிபான்கள் காபூலை பிடிக்கும் முன்பே காபூல் சிறைச்சாலைகளில் தாலிபான்கள் ஆட்டம் தொடங்கிவிட்டது. ஜெயிலில் இருந்து தப்பிக்க தாலிபான் கைதிகள் பலர் முயன்றனர். இதையடுத்து தாலிபான் படையை சேராத மற்ற கைதிகளை வைத்து சிறைக்குள் இருந்த தாலிபான்களை சமாளித்தோம். இதனால் அங்கே பெரிய மோதலே ஏற்பட்டது. என்னுடன் வேலை பார்த்த பல அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளை காணவில்லை.
அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் நான் கடைசி வரை போராட வேண்டும் என்ற மனநிலையில்தான் இருந்தேன்.சில அரசியல் தலைவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டனர். எங்கள் முதுகில் அரசியல்வாதிகள் குத்திவிட்டனர். அவர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக தங்கிக்கொண்டு ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஏழை மக்களை தாலிபான்களுக்கு எதிராக போராட சொல்கிறார்கள்.
என்னுடைய பாதுகாவலர் ரஹீமை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு புறப்படும் முன் குரானை கொடுத்து சத்தியம் ஒன்றும் வாங்கினேன். ரஹீம்.. நான் ஒரு போதும் தாலிபான்களிடம் அடிபணிய மாட்டேன். நாம் பஞ்சசீர் செல்கிறோம்.
வழியில் தாலிபான்களை கடந்தே செல்ல வேண்டும். தாலிபான்களை நாம் எதிர்ப்போம். ஆனால் என்னை தாலிபான் கைது செய்தாலோ, எனக்கு காயம் பட்டாலோ ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கிறேன் உனக்கு.. என்னை தலையில் இரண்டு முறை சுட்டுவிடு. அடிமையாக வாழ்வதற்கு.. வீரமாக இறப்பதே மேல்.. என்னை சுட்டுவிடு.. குரானில் சத்தியம் செய் என்று என் காவலரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ஆப்கானிஸ்தான் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.