சசிகலாவால் மக்கள் ஆதரவை இழந்தது அமமுக
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியதால் அமமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை அமமுக குலைக்க கூடும் என்று தேர்தல் வல்லுநர்கள் தெரிவித்து வந்தனர். அமமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்தது அதிமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்றாலும் அமமுகவிற்கு பின்னடைவையே கொடுத்துள்ளது.
சசிகலா ஓய்வு அறிவிப்பு அமமுக தொண்டர்களை வெகுவாக பாதித்தது. யாரை நம்பி அமமுகவிற்கு வந்தார்களோ அவரே இல்லை என்ற பிறகு கட்சியில் இருந்து என்ன பயன் என்று அமமுக தொண்டர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட ஆர்வம் இல்லாமல் அமமுக தொண்டர்கள் இருந்தனர், உற்சாகத்தை இழந்த தொண்டர்கள் பிரச்சாரங்களில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் அமமுக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதே கூட மக்களுக்கு தெரியாத நிலை உள்ளது.
சசிகலாவின் ஒய்வு அறிவிப்பு, உற்சாகம் இழந்த தொண்டர்கள் போன்ற காரணங்களால் அமமுகவுக்கான செல்வாக்கு வெகுவாக சரிந்துள்ளது. ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களின் பிரதிநிதிதுவத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி என்பதால் அவர்களை மட்டுமே நம்பி வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதுவே தற்போது அமமுகவுக்கு எதிராக அமைந்துள்ளது.
ஒரு சமூக மக்களின் பிரதிநிதியாக உலா வரும் அமமுகவை மக்கள் சாதிக் கட்சியாக பார்க்க தொடங்கியுள்ளனர். அந்த சமூக மக்கள் உள்ள பகுதிகள் தவிர மற்ற சமூக மக்கள் வசிக்கும் இடங்களில் அமமுகவிற்கு வரவேற்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அமமுகவின் முகத்திரை விலக்கப்பட்டு சாதிக்கட்சி என்ற உண்மையான நிலையை மக்கள் உணர்த்தும் தேர்தலாக அமமுகவிற்கு இத்தேர்தல் அமையும் என்று கருதப்படுகிறது.