பணி நீக்கம் செய்ததாக அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த பெண்கள் போராட்டம்
ஒட்டன்சத்திரம் அம்மா உணவகத்தில் ஆறு வருடங்களாக பணிபுரிந்த பெண்களை பணிநீக்கம் செய்ததாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் தற்காலிக ஊழியர்களாக கடந்த ஆறு வருடங்களாக 12 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் 6 பெண்களை மட்டும் பணியில் இருந்து நீக்கியதோடு இது குறித்து அவருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இரவு பணி முடிந்தபோது அம்மா உணவகத்தின் சாவியை நகராட்சி ஊழியர்கள் கேட்டு வாங்கியுள்ளனர்.
மேலும் இன்று காலை 3 மணிக்கு வழக்கம் போல் பெண்கள் பணிக்கு வந்துள்ளனர். அப்போது அம்மா உணவகத்தில் புதியதாக பெண்கள் வேலை பார்த்து வந்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு தங்களை பணியில் இருந்து நீக்கி விட்டதாகவும், இனிமேல் பணிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமென நினைத்து பணிபுரிந்து வரும் தங்களை சிலரின் தூண்டுதலின் பேரில் நீக்கியிருப்பதாகவும் தங்களுக்கு மீண்டும் பணியில் ஈடுபட அனுமதி அளிக்குமாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.