அம்மா உணவகங்களில் இலவச உணவு - முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
பருவமழைக் காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
சென்னையில் சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுந்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையின் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியின் நிவாரண முகாம்களில் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி, மழை நீர் வடிகால் திட்டங்களில் சொல்ல முடியாத அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. வெள்ள மீட்பு பணிகளுக்கு பின் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போதைய வெள்ள பாதிப்புக்கு கடந்த அதிமுக அரசின் நிர்வாகமே காரணம் என்றும் கூறியுள்ளார்.