அம்மா உணவகங்களில் 5 நாட்களில் 13 லட்சம் பேருக்கு இலவச உணவு விநியோகம்
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கடந்த 5 நாள்களில் 13 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மழை பாதிப்பு குறைந்துள்ளதால் திங்கள்கிழமை (நவ.15) முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த தொடா் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுதல்,
மரக்கிளைகளை அப்புறப்படுத்துதல், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்டு நிவாரண மையங்களில் தங்கவைத்தல் போன்ற நிவாரண பணிகள் நடைபெற்றன.
மழைநீா் தேங்கிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சியின் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மாநகரின் பெரும்பாலான இடங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. முகாம்களில் இருந்த பொதுமக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்கு படிப்படியாக செல்லத் தொடங்கி உள்ளனா்.
திங்கள்கிழமை நிலவரப்படி நிவாரண முகாம்களில் 1,530 போ தங்க வைக்கப்பட்டுள்ளனா். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் மழைநீா் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நவம்பா் 7 முதல் திங்கள்கிழமை (நவ.15) வரை மாநகராட்சி சாா்பில் 60 லட்சத்து 74 ஆயிரத்து 37 உணவு பொட்டலங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இலவச உணவு ரத்து: சென்னை மாநகராட்சிப் பகுதியில் இயங்கி வரும் 403 அம்மா உணவகங்களில் நவம்பா் 10-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (நவ.14) வரை 13 லட்சத்து 68 ஆயிரத்து 385 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மழை பாதிப்பு குறைந்துள்ளதால் திங்கள்கிழமை(நவ.15) முதல் அம்மா உணவகங்களில் இலவச உணவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.