Friday, Jul 11, 2025

இப்போ அம்மா கிளினிக் , அப்புறம் அம்மா உணவகமா ? - கொந்தளித்த டிடிவி தினகரன்

ttvdhinakaran ammaminiclinic
By Irumporai 4 years ago
Report

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை ஒட்டுமொத்தமாக மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன்:

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் மூடப்பட உள்ளன. அதில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு பணியில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கடந்த ஆட்சியில் அவசர கதியில் சரியான ஏற்பாடுகளின்றி அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டபோதே அவற்றிலுள்ள குறைகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

 அந்த கிளினிக்குகள் ஓராண்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருப்பது உண்மையாக இருந்தாலும்கூட மக்கள் நலன் கருதி அவற்றை நீட்டித்து செயல்படுத்தக் கூடாதா? அப்படி செய்வதுதானே ஓர் அரசாங்கத்தின் சரியான பணியாக இருக்க முடியும்? புரட்சித்தலைவி அம்மா பெயரிலான திட்டங்களை எல்லாம் மூடுவதிலேயே தி.மு.க. அரசு குறியாக இருப்பது தவறானது.

அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து, ஏழை, எளிய மக்களின் பசியாற்றி வரும் அம்மா உணவகங்களும் மூடப்படுமோ? என்ற கவலை ஏற்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.