யார் இந்த டிடிவி தினகரன்.? அமமுகவின் சாதனையும்...சறுக்கல்களும்..!
அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே லட்சியம்' என்கிற முழக்கத்தோடு டி.டி.வி.தினகரனால் தொடங்கப்பட்ட கட்சிதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம். அந்தக் கட்சி கடந்துவந்த பாதை, லட்சியத்தில் அடைந்த முன்னேற்றம், கட்சிக்குள் ஏற்பட்ட சலசலப்புகள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
யார் இந்த டி.டி.வி.தினகரன்?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அரசியல் களத்தில் அதிகம் கவனிக்கும் நபராக உருவெடுத்தார் டி.டி.வி.தினகரன். அப்போது தமிழக மக்களிடையே எழுந்த மிகப்பெரிய கேள்வி யார் இந்த டி.டி.வி.தினகரன்? என்பதுதான்..
1996 ஆம் ஆண்டு அதிமுகவில் சில சலசலப்புகள் ஏற்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சசிகலா உறவினராக ஜெயலலிதாவிற்கு அடையாளம் காட்டப்பட்டவர்தான் டி.டி.வி.தினகரன்.
தனது துடிப்பான ஆற்றல் மற்றும் செயல்திறன் மூலம் போயஸ்கார்டனின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்க தொடங்கினார். ஜெயலலிதாவின் பாதுகாப்பு பணிகளை கவனித்துக் கொள்ள வேண்டுமென்பதே தினகரனிற்கு கொடுக்கப்பட்ட முதல் மற்றும் முக்கிய பணி. அதில் சிறப்பாகவும், தெளிவாகவும் பணியாற்றியதால் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக மாறினார்.
அதிமுகவின் அதிகாரமையம் டிடிவி தினகரன் தான் போன்ற விமர்சனமும் அரசியல் கட்சிகளுக்கிடையே நிலவியது. போயஸ்கார்டனின் கிடைத்த செல்வாக்கு அரசியலிலும் கிடைக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை
1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணியாக களம் கண்டது. அதுதான் டிடிவி தினகரன் தமிழக அரசியலில் கால்பதித்த தருணம். பெரியகுளம் அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரனை முன்னிறுத்தினார் ஜெயலலிதா.
அந்த தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அதிமுக, காங்கிரஸ் கூட்டணி தோல்வியைத் தழுவியது. தமிழகத்தில் 10தொகுதிகளில் அதிமுக வெற்றி அடைந்திருந்தது.
அதில் ஒன்று டிடிவி தினகரன் போட்டியிட்ட பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதி. அரசியல் எல்லாம் சிரமம், அத்தனை எளிதில் பிடித்து விட முடியாது என்றவர்களின் வாயடைத்துக் காட்டினார். டெல்லியின் நகர்வுகளைத் தெரிந்து கொள்வதற்காகவே ஜெயலலிதா தனக்கு வாய்ப்பளித்ததாக தினகரனே கூறினார். நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், டெல்லியில் அதிமுக முகமாகவே வலம் வந்தார் தினகரன்.
இவரின் அரசியல் ஆற்றல், வியூகங்கள் வகுக்கும் திறமைக்காக கட்சி பதவிகள் தேடி வந்தது. புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் என்ற பதவிகளோடு அதிமுகவின் பொருளாளராக நிற்க வைத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.
அதிமுகவின் பொருளாளராக..
அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தினகரன் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வியால் அரசியல் செல்வாக்கை இழப்பார் என எண்ணிய நிலையில் அவரை உடனடியாக மாநிலங்களவை உறுப்பினராக்கினார் ஜெயலலிதா.
அதற்கு காரணம் டெல்லியில் அவர் திறம்பட செயல்பட்டதே ஆகும். சில உட்கட்சி விவகாரங்கள் காரணமாக 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா, தினகரன் உட்பட சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் அதிமுகவில் இருந்து நீக்கினார்.
ஜெயலலிதா மறைவு
பின்பு 2011 முதல் 2016 வரை தினகரன் தனது அரசியல் செயல்பாடுகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கி இருந்தார். அப்போதுதான் தமிழகத்தையே உலுக்கிய துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. 2016, டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மறைவு தமிழகத்தையே உலுக்கியது. அவர் மறைந்த சில தினங்களிலேயே யார் அடுத்த அதிமுக தலைவர், யார் அதிகார மையம் என கேள்வி எழ தொடங்கியது.
அதிமுகவின் தலைமை வெற்றிடத்தை நிரப்ப முடிவெடுத்த அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலோடு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக நியமித்தனர். ஓபிஎஸ் உட்பட அனைத்து அமைச்சர்களும் சசிகலாவிடம் தலைமையை ஏற்குமாறு கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சசிகலா
துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்புடன் முக்கிய முடிவெடுக்கும் நபராக மீண்டும் அதிமுகவில் நுழைந்தார் தினகரன். அடுத்து ஓபிஎஸ்-ன் ராஜினாமா, சசிகலாவின் அழுத்தம், தியானம், தர்மயுத்தம் என சில மாதங்கள் அதிமுகவில் பதட்டமே நிலவியது. தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க இருந்த நேரத்தில், உச்சநீதி மன்ற தீர்ப்பினால் அவர் சிறைக்கு செல்லவேண்டிய சூழல் இருந்தது.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்து அதன்பின்னரே சிறை சென்றார் சசிகலா. ஜெயலலிதா மற்றும் சசிகலா உறுதுனையாக இல்லாத நிலையில், டிடிவி தினகரனின் திறமையை சோதிக்க வந்ததுதான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல். அதில் தாமே வேட்பாளராகவும் களம் இறங்கினார்.
ஆர்.கே.நகர் தொகுதி
இந்த தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் அங்கு வெற்றி பெறுவோர் அதிமுகவின் முகமாக அமைவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக சின்னம் முடக்கப்பட்டிருந்த நிலை என்பதால், ஓபிஎஸ் ஒருபுறமும், தினகரன் ஒருபுறமும் சுயேட்சையாக களம் கண்டனர். தினகரனை எதிர்த்து அவைத் தலைவர் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக சார்பில் மருது கனேஷ் போட்டியிட்டார்.
முக்கியமான தேர்தல் என்பதால் மக்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தன. இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கட்சி சின்னமான இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில், பிரிந்து செயல்பட்ட ஈபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் ஒரே அணியாக இனைந்தனர்.
ஓபிஎஸ்,ஈபிஎஸ்
சசிகலா மற்றும் குடும்பத்தினரை அதிமுகவில் இணைக்க கூடது எனவும், ஜெயலலிதா மறைவில் மர்மம் குறித்த விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற சில நிபந்தனைகளோடே இணைந்தார் ஓபிஎஸ். அதன் பின், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு ஓபிஎஸ்க்கு ஒருங்கினைப்பாளர் பதவியும், ஈபிஎஸ்க்கு துணை ஒருங்கினைப்பாளர் பதவியு வழங்கப்பட்டது.
மேலும் பொதுச்செயலாளர் பதவியும் இருவருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இதில் குக்கர் சின்னத்தில் தினகரன் தனித்து போட்டியிட்டு 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இடைத்தேர்தல் ஒன்றில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியை மீறி சுயேட்சையாக வெற்றி பெற்றது பெரும் பேசு பொருளாக மாறியது.
அவைத் தலைவர் மதுசூதனன் அணிக்கே அதிமுக சின்னமும், கட்சியும் ஒதுக்கப்பட்டது. எனவே, கட்சியும், சின்னமும் இல்லாத நிலையில் தினகரன் அதிமுகவை மீட்டெடுப்பதா இல்லை தனிக்கட்சி ஆரம்பிப்பதா என குழம்பிய நிலையில் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடினார்.
அமமுக
ஒருபுறம் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தயாராகிக்கொண்டிருக்க, மறுபுறம் 2018-ம் ஆண்டு மதுரை மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தினகரன் அவரது அமைப்பிற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்தார். கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் கொண்ட கொடியை கழகத்தின் கொடியாக அறிமுகப்படுத்தினார். இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.
செல்வாக்குடன் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் தினகரன். 11 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல் முறையாக போட்டியிட்ட அமமுக கட்சிக்கு 89,013 வாக்குகள் கிடைத்தன. அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினர்.
கிட்டத்தட்ட ஆறு சதவிகித வாக்குகளைப் பெற்று அதிமுக-வினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. காரணம், சிதம்பரம், ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக-வின் வெற்றியை மடைமாற்றியது அமமுக. தொடர்ந்து நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது அ.ம.மு.க. குறிப்பாக, ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க-வின் வெற்றியை மடைமாற்றியது அமமுக.
பாராளுமன்றத் தேர்தல்
2019-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 37 இடங்களில் போட்டியிட முன்வந்தனர். தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அந்த தேர்தலில் மொத்தமாக 22,25,377 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தனர். அதுவரை தேர்தல் களத்தில் ஓரளவுக்கு செல்வாக்குடனும் கௌரவத்துடனும் வலம்வந்த அமமுக, அடுத்தடுத்த தேர்தல்களில் சறுக்க ஆரம்பித்தது.
சட்டமன்ற தேர்தல்
அந்த தோல்வியால் மனமுடைந்துப் போகாமல் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து படுதோல்வியைச் சந்தித்தது. அதில் 171 தொகுதிகளில் போட்டியிட்டனர். 10,88,789 வாக்குகள் மட்டுமே பெற்று இதிலும் தோல்வி அடைந்தனர். கட்சியின் வாக்குவங்கி சரி பாதியாகக் குறைந்ததோடு மட்டுமல்லாமல், கோவில்பட்டியில் போட்டியிட்ட கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனே தோல்வியைச் சந்தித்தது யாரும் எதிர்பார்க்காதது.
தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், தற்போது நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றிபெற்றிருக்கிறது அந்தக்கட்சி. தேர்தல் களத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியை எட்டாவிட்டாலும்கூட, கணிசமான வெற்றியைப் பெற்று களத்தில் நிற்கிறது.
பின்னடைவு
ஆனால், கட்டமைப்புரீதியாக கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்ததைவிட, கடந்த நான்காண்டுகளில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. கட்சி தொடங்கும்போது தினகரனுக்குத் பக்க பலமாக நின்ற பலர் இன்று கட்சியில் இல்லை.
உதாரணமாக, செந்தில் பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், மாரியப்பன் கென்னடி, வ.து.நடராஜன் உள்ளிட்ட பலர் தி.மு.க-வில் இணைந்துவிட்டனர். மாவட்டச் செயலாளர்கள் சிலர் அதிமுக-வில் இணைந்துவிட்டனர்.
நிர்வாகிகள் அதிருப்தி
கட்சி நிர்வாகிகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் அவ்வப்போது தினகரன் அமைதியாக சென்றுவிடுவதே அதற்குப் பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதேபோல, தேர்தல் காலங்களில் பொருளாதாரரீதியான உதவிகளுக்குத் தலைமையைக் கடைசிவரை எதிர்பார்த்துக் காத்திருப்பதும், பிறகு ஏமாற்றப்படுவதுமாக நிர்வாகிகள் கடுமையான அதிருப்திக்கு தொடர்ச்சியாக ஆளாகிவருகின்றனர்.
அதன் காரணமாக யாராவது கட்சியைவிட்டு வெளியேற முடிவெடுத்து, தலைமைக்கு அதைத் தெரியப்படுத்தினாலும், 'விருப்பம் இருந்தால் இருங்கள், இல்லையென்றால் கிளம்புங்கள்' என்கிற தினகரனின் அணுகுமுறைதான் பலரை முகச்சுளிப்புக்கு ஆளாகியிருக்கிறது. தவிர, சசிகலாவின் செயல்பாடுகளுக்கு முழுமையாக ஆதரவாக நிற்பதா, இல்லை விலகி நிற்பதா என்பதில் கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் தெளிவாக வழிகாட்டவில்லை.
தினகரனின் கையில்தான்..
அதனால், அந்த விஷயத்திலும் குழப்பத்திலேயே நிர்வாகிகள் காலத்தைக் கழித்துவருகின்றனர். ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி தினகரனுக்கென்று ஒரு வல்லமை இருக்கத்தான் செய்கிறது. அவர் உத்தரவிட்டால், ஆயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு அவருக்கு விசுவாசுமான நிர்வாகிகள் இன்னமும் கட்சியில் இருக்கிறார்கள் என்பதற்கு பல இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டம் சாட்சி. ஆனால், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவது என்பது தினகரனின் கையில்தான் இருக்கிறது.
அம்மா வழியில் ஆட்சி
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை அம்மாவின் வழியில் ஆட்சி அமைப்பது தான் எங்களுடைய ஒரே குறிக்கோள்; லட்சியம். இந்த நோக்கத்துடன் தொடர்ந்து செயல்பட்டு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தற்போது 5வது ஆண்டில் அடியெடுத்து அம்மா பெயரை முழக்கமிட்டபடி பயணித்து கொண்டிருக்கிறது அமமுக. பொருத்திருந்து பார்ப்போம் மாற்றத்தை...