தமிழ்நாட்டில் ஜனநாயகம் சீரழிந்துவிட்டது - திமுக அரசை விளாசித் தள்ளிய அமித்ஷா!
திமுகவின் குடும்ப ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், ஜனநாயகம் சீரழிந்துவிட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போதே திமுக ஆட்சி குறித்து இவ்வாறு விமர்ச்சித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமாரை ஆதரித்து சிவகிரி அரசு மருத்துவமனையில் இருந்து தீரன் சின்னமலை சிலை வரை திறந்த வாகனத்தில் சாலை வலம் சென்று தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
சாலை வலத்தைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுகவின் குடும்ப ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், ஜனநாயகம் சீரழிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலினின் ஒரே எண்ணம் என்றும் விமர்சித்த அவர், அதிமுக தலைமையில் ஆட்சியமைந்ததும் தமிழ்நாட்டின் இழந்த பெருமைகள் மீட்டெடுக்கப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.