சென்னை வந்தடைந்த அமித்ஷா - யார் யாருடன் சந்திப்பு?
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில், தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்துள்ளது.
திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜக அதிமுக கூட்டணி?
குறிப்பாக கூட்டணியில் இருந்து விலகி சென்ற அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர, பாஜக காய் நகர்த்தி வருகிறது.
கடந்த மாதம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள், பாஜக மாநில தலைவர் பதவியில் அண்ணாமலையை மாற்றுமாறு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதனால் அண்ணாமலைக்கு பதிலாக, அதிமுக பாஜக கூட்டணிக்கு வசதியாக புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்பதை அண்ணாமலையும் உறுதிப்படுத்தினார்.
சென்னை வந்த அமித்ஷா
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன்,வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, பொன் ராதாகிருஷ்ணன், கரு நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
யாருடன் சந்திப்பு?
நாளை பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், தேர்தல் கூட்டணி, அடுத்த தலைவர், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனையடுத்து, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
இதன் பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அதேவேளையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடனான சந்திப்பு இறுதி செய்யப்படவில்லை.
அமித்ஷாவை சந்திக்க உள்ளீர்களா என கேட்டபோது, ஆண்டவனுக்கே வெளிச்சம் என ஓபிஎஸ் கூறினார்.