தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அதிகளவில் இளைஞர்களை இணைக்க மாநில நிர்வாகிகளுக்கு அமித் ஷா உத்தரவு..!
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த அதிகளவில் இளைஞர்களை இணைக்க மாநில நிர்வாகிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதற்காக தமிழ்நாட்டில் ஜுலை மாதம் இளைஞர்களை இணைக்க சிறப்பு முகாம் நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களிடம் பாஜகவின் தேசிய சிந்தனைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முடிவு செய்திருப்பதாக பாஜக தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக நிர்வாகிகளில் இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலில் யார் யார் இடம் பெற்றுள்ளார்கள்.
அவர்கள் பின்புலமை என்ன என்பது குறித்து பாஜக தேசிய தலைமை அலசி ஆராய்ந்துள்ளது. வலுவாக இளைஞரணியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது பாஜக தேசிய தலைமை.
ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பாஜகவில் இளைஞர்களை இணைப்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்தவுள்ளதாம்.
இதில் 18 வயது முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களை இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேசிய சிந்தனைகளை வளர்க்கும் சிறப்பு பயிற்சிகள் எல்லாம் வழங்க அக்கட்சி முடிவெடுத்துள்ளது.