மோடி போலவே வருத்தபட்ட அமித்ஷா: எதற்கு தெரியுமா?
உலகின் மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்' என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்தியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொண்டார். மலரட்டும் தாமரை, ஒளிரட்டும் புதுச்சேரி என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது, சபாநாயகர் சிவக்கொழுந்துவின் சகோதரர் ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன் ஆகியோர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வு நடக்கும் போதே, அதிரடி திருப்பமாக சபாநாயகர் சிவக்கொழுந்துவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா, காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடக்கிறது.
அந்த கட்சி நாட்டில் இருந்தே காணாமல் போகும். நன்றாக பொய் சொல்பவர் விருது நாராயணசாமிக்கு தான் கொடுக்க வேண்டும். தகுதிக்கும் திறமைக்கும் அவர் வாய்ப்பு கொடுத்ததே இல்லை என கூறினார். தொடர்ந்து பேசிய அமித்ஷா உலகின் மிக உன்னதமான மூத்த மொழியான தமிழில் பேச முடியவில்லையே என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொண்டு தமிழில் பேச ஆசைப்படுகிறார். நானும் தமிழ் கற்றுக்கொண்டு பேசவேன் என கூறினார்.
இன்று காலை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடியும், 'எவ்வளவு முயன்றும் என்னால் சரியாக தமிழ் கற்றுக் கொள்ள முடியவில்லை' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.