காஷ்மீரில் அரங்கேறிவரும் தொடர் தாக்குதல் - பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வெளி மாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் 16 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். கடந்த மே 1-ம் தேதியில் இருந்து குறிவைத்து 8 கொலைகள் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் முஸ்லிம் அல்லாத அரசு ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கொலைக்கு பலத்த கண்டனம் எழுந்துள்ள நிலையில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் தாக்குதல்கள் காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலில், காஷ்மீர் பாதுகாப்பு சூழல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் முதலில் ஆலோசனை நடத்திய அமித்ஷா, அதன் பின்னர் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் ராணுவ தளபதி ஆகியோரிடம் ஆலோசன நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய ரிசர்வ் படை பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.