வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
வரும் பிப்ரவரி 28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த மாதம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருகை தந்தார். ராகுல்காந்தி திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் தமிழகத்திற்கு வருகை புரிந்து மதுரையில் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ஆம் தேதி தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்துகொள்ள இருப்பதாகவும், தமிழகத்தில் பாஜக எப்படியாகினும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று அதிகளவில் வேட்பாளர்களை சட்டப்பேரவைக்குள் அனுப்ப இருப்பதாகவும், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 14ம் தேதி பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக சென்னைக்கு வருகை தந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனியாக அழைத்து பேசிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழ்நிலையில், அமித்ஷாவின் வருகை முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.