தன் வாயால் கிரிக்கெட் பேட்-ஐ கடிக்கும் தோனி ; புகைப்படம் வைரல் - விளக்கம் கொடுத்த வீரர்

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
15-வது ஐபிஎல் போட்டியின் 55 லீக் போட்டி மும்பை பட்டீல் மைதானத்தில் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக டெவன் கான்வே 87 ரன்களும்,ருத்துராஜ் கெய்க்வாட் 41 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஸ்ரீகர் பரத் (8) மற்றும் டேவிட் வார்னர் (19) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால், 17.4 ஓவரில் வெறும் 117 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில் சென்னை அணி பேட்டிங் ஆடும் போது அடுத்ததாக களமிறங்குவதற்கு தோனி தயாராக இருந்தார். அப்போது பவிலியனில் இருந்த அவர் தனது பேட்டை கடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவ தொடங்கியது.
அன்றைய போட்டி மட்டுமின்றி இதற்கு முன்பும் தோனி பல போட்டிகளில் இதை செய்திருக்கிறார். தோனி இவ்வாறு செய்வதற்கு என்ன காரணம் என ரசிகரகள் பலரும் இணையத்தில் உரையாடி வந்தனர்.
இந்நிலையில், இதற்கு காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அமீத் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.
In case you’re wondering why Dhoni often ‘eats’ his bat. He does that to remove tape of the bat as he likes his bat to be clean. You won’t see a single piece of tape or thread coming out of MS’s bat. #CSKvDC #TATAIPL2022
— Amit Mishra (@MishiAmit) May 8, 2022
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், " தோனி தனது பேட்டை அடிக்கடி கடிப்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதற்கு காரணம் அவரின் பேட்டில் உள்ள டேப்கள், நூல்கள் ஏதேனும் வெளியே வந்திருந்தால் அதனை அவர் எடுப்பதற்காக அவ்வாறு செய்வார். அவருக்கு அவரது பேட் சுத்தமாக இருக்க வேண்டும்.
இதனால் தான் தோனி பேட்டிங் செய்கையில் ஒரு நூல் அல்லது டேப் கூட அவரின் பேட்டில் இருந்து வந்ததே இல்லை." என அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.