இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரிக்கும் - அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் அதிகரிக்கும் என அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கை எச்சரித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்து தாக்கியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்தது.

அப்போதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே ஆன உறவு மோசமாகவே இருந்து வந்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைகளும் அதன் பிறகு நடைபெறவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறையின் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், “பிரதமர் மோடியின் கீழ் இந்தியா கடந்த காலத்தைவிடவும் பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு இராணுவ ரீதியாக பதிலளிக்கும் வாய்ப்பு அதிகம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடியான யுத்தத்திற்கு சாத்தியம் இல்லையென்றாலும் தற்போதைய சூழ்நிலை தொடர்ந்து மோசமாகும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.