'நானும் தமிழ் பேசுவேன்' அமெரிக்க அதிபர் வேட்பாளர் தமிழில் பேசி அசத்தல் - வைரலாகும் Video!

United States of America India World
By Jiyath Sep 27, 2023 11:15 AM GMT
Report

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமி தமிழில் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அதிபர் வேட்பாளர்

அமெரிக்காவில் 2024ம் ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட பலரும் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி(38) போட்டியிடுவதற்காக ஆதரவு திரட்டி வருகிறார். தற்போது நடந்து முடிந்த குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் குறித்த கருத்து கணிப்பில், முதல் இடத்தில் டிரம்பும், இரண்டாம் இடத்தில் விவேக் ராமசாமியும் உள்ளனர். விவேக் ராமசாமி அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 1985 ஆகஸ்ட் 9ல் பிறந்தவர்.

இவரது குடும்பத்தினர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ் பேசும் பிராமணர்கள் ஆவர். விவேக் ராமசாமியின் தந்தை ராமசாமிக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அவர்கள் குடும்பத்துடன் அங்கே சென்றார்கள்.

தமிழ் உரையாடல்

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விவேக் ராமசாமியுடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் தமிழில் உரையாடினார். அந்த வீடியோவை விவேக் ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த நபர் விவேக் ராமசாமியிடம் "உங்களை அமெரிக்க அதிபராக பார்க்க வேண்டும் என விரும்புகிறேன், அதற்காக வாழ்த்துகள்" என்று சொன்னார். அதற்கு விவேக் ராமசாமி அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அந்த இளைஞர் "எனது குடும்பத்தினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், வேலூரில்.. என்கிறார்.

இதை கேட்டதும் மகிழ்ச்சியடைந்து உடனே தமிழில் பேசிய விவேக் ராமசாமி "ஓ வேலூர்.. நானும் தமிழ் பேசுவேன், நல்லா இருக்கீங்களா.. ஆனால் பாலக்காடு தமிழ்" என்று சொல்லி சிரித்தார். அதற்கு அந்த இளைஞர், "நிச்சயம் நீங்கள் தலைவராக வேண்டும்" எனச் சொல்லி மீண்டும் தமிழிலேயே வாழ்த்தினார். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.