கொரோவை வெல்ல புது ஆயுதம்! அமெரிக்கா செய்து வரும் ஆய்வு என்ன?
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கி ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. உலகம் முழுவதும் தற்போது வரை கொரோனாவால் சுமார் 18 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 38 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர்.
கொரோனா பரவல் இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனப் பல கட்டங்களாக பரவி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிற நிலையில் பல்வேறு நாடுகள் தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதமாக உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இதில் சொட்டு மருந்தாக கொரோனா தடுப்பு மருந்தை செலுத்துவதற்கான பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது அமெரிக்கா புதிய பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க அரசின் தலைமை ஆலோசகர் அந்தோணி ஃபௌசி இதைப்பற்றி தெரிவிக்கையில், “அமெரிக்க அரசு கொரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் 24,000 கோடியை முதலீடு செய்து ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பூசி தான் தற்போது உள்ள ஒரே ஆயுதம். ஆனால் தடுப்பூசி செலுத்தியும் பலனளிக்காமல் இருக்கும் மக்களுக்கு இந்த மாத்திரை என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மாத்திரை தொடர்பான ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் முடிவடைந்து இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.