அமெரிக்காவில் கால் பதித்த ஸ்டாலின் - உற்சாக வரவேற்பு அளித்த தமிழர்கள்
அமெரிக்காவுக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து சான் பிரான்சிஸ்கோ சென்றுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர்.
வாய்ப்புகளின் பூமி
மேலும் சான் பிரான்ஸிஸ்கோ வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டு முறைப்படி ஆரத்தி எடுத்தும் நடனமாடியும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக, அவரின் புகைப்படத்துடன் சமூக நீதிக்காக பாடுபடும் உண்மையான தலைவர் மற்றும் தமிழின் பெருமை என்ற வாசகங்களுடன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை வரவேற்பதாக அதில் பதிவிடப்பட்டுள்ளது.
In the USA—the land of opportunities, seeking support for the prosperity of Tamil Nadu. pic.twitter.com/Ng5IF6CZVz
— M.K.Stalin (@mkstalin) August 29, 2024
``வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ்நாட்டின் செழுமைக்கு புதிய ஆதரவைத் தேடி பயணம்.” என தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டாளர்களுடன் சந்திப்பு
சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல், அமெரிக்கா வாழ் தமிழர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்வுகளில் பங்குபெற உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 12 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து கிளம்பி சென்னை வருகிறார்.