"உக்ரைனில் எந்நேரமும் ரஷ்யா ஊடுருவலாம்" - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முக்கிய உத்தரவு
நேட்டோ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வமாக இருக்கிறது.
ஆனால் ரஷ்யா இதனை விரும்பவில்லை. இருந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில மாதங்களாக உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க போவதாகவும் தகவல் வெளியானது.
அதற்கு முன்னேற்பாடாக ரஷ்யா தனது துருப்புகளை உக்ரைன் எல்லையில் நிலைநிறுத்தியது. உடனே தலையிட்ட அமெரிக்கா, அப்படி ஒன்று நடந்தால் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என எச்சரித்தது.
இதனால் உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா- ரஷ்யா பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் - ரஷ்ய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
எட்டு மணி நேர உரையாடலில் எவ்வித சிறிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. எல்லையில் துருப்புகளை அதிகரிப்பதன் மூலம் ரஷ்யாவின் நடத்தையை அச்சுறுத்துவதாக அமெரிக்க தரப்பு குற்றஞ்சாட்டியது.
ஆனால் ரஷ்ய தரப்போ உக்ரைன் விவகாரங்களில் அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தலையிடுவதன் மூலம் அதன் தேசிய பாதுகாப்பை இழிவுப்படுத்துவது போல் அமைவதாக குற்றஞ்சாட்டியது.
இதனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.
இதனிடையே உக்ரைன் நாட்டில் தனக்கு ஆதரவாக இருக்கும் முன்னாள் எம்.பி. எவென் முரயெவை ஆட்சியில் அமர வைத்து பொம்மை அரசாங்கத்தை நடத்த ரஷ்யா திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டு தலைவர்கள் பலரிடமும் ரஷ்யா மறைமுகமாக தொடர்பில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உக்ரைன் அரசை சீர் குலைக்க ரஷியா திட்டமிட்டு இப்படி செயல்படுவதாக ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
இவை அனைத்தையும் ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்நிலையில உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்ய படைகள் எந்நேரமும் ஊடுருவலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆகவே உக்ரைனிலிருந்து தனது தூதரக அதிகாரிகள் குடும்பத்துடன் உடனே வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உக்ரைன், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.