இன்று பதவியேற்கிறார் ஜோ பைடன்: டிரம்ப் சொன்ன வாழ்த்து செய்தி என்ன தெரியுமா?
அமெரிக்காவின் 46-ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்கிறார், அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிசும் பதவியேற்கவுள்ளார். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து, ஜனநாயகக் கட்சி சாா்பில் பைடன் போட்டியிட்டாா்.
அந்தத் தோ்தலில் 306 மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, வாஷிங்டனிலுள்ள நாடாளுமன்றத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10 மணி) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் அவா் அதிபராகப் பொறுப்பேற்கிறாா்.
இந்த விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் கொரோனா காலம் என்பதால் குறைந்த அளவிலான பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதையொட்டி நாட்டுமக்களிடம் விடைபெறும் வகையில் காணொலி மூலம் உரையாற்றினார்.
அப்போது, புதிதாக பதவியேற்கவுள்ள நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜோ பைடன் நிர்வாகத்திற்கு அதிர்ஷ்டம் துணை நிற்கட்டும் என்றும் தெரிவித்தார்.