இனி ‘செல்போன்’ மூலமாகவும் கொரோனா பரிசோதனை செய்யலாம் - அமெரிக்கா கண்டுப்பிடிப்பு

america covid spread covid test method through cellphone cellphone test
By Swetha Subash Jan 26, 2022 07:39 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

‘செல்போன்’மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் முறை அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் 20 நிமிடத்தில் முடிவை தெரிந்துகொண்டு விடலாம்.

உலகளவில் கொரோனா பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.

ஹார்மனி கொரோனா பரிசோதனை முறை என்று அழைக்கப்படுகிற இந்த முறையில், சார்ஸ் கோவ்-2 வைரசின் மரபணுப்பொருள் கண்டறியப்படுகிறது. இதுபற்றி வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பேரி லூட்ஸ் கூறியதாவது:-

“குறைந்த கட்டணத்தில் எங்கும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு எளிமையானதாக இந்த சோதனையை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

குறைந்த கட்டணம், உயர் செயல்திறன் கொண்ட இந்த சோதனை உள்நாட்டிலும், உலகமெங்கும் அணுகக்கூடியதாக இருக்கும்.

இந்த சோதனையானது நாசி ஸ்வாப் மாதிரியில் சார்ஸ் கோவ்- ஆர்.என்.ஏ. மரபணு இருப்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். போன்ற முறையை பயன்படுத்துகிறது. ஸ்மார்ட்போன், டிடெக்டரை இயக்கவும், முடிவை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு நிலையான வெப்ப நிலையில் இந்த சோதனை செய்யப்படுகிறது. எனவே இது வெப்பம் மற்றும் குளிர்விக்கும் நேரத்தை நீக்குகிறது. 20 நிமிடங்களில் முடிவை அளிக்கிறது” என கூறினார்.

இதில் பயன்படுத்தக்கூடிய டிடெக்டர், ஒரே நேரத்தில் 4 மாதிரிகளை சோதிக்கிற திறன் கொண்டது. இந்த சோதனை முடிவு மிகத்துல்லியமாக உள்ளது என்று சொல்லப்படுகிறது.

இந்த ஹார்மனி கொரோனா பரிசோதனை முறையில், வைரஸ் மரபணுவின் 3 வெவ்வேறு பகுதிகளை கண்டறியப்படுகிறது.

ஒரு புதிய மாறுபாடு ஒரு பிராந்தியத்தில் பல பிறழ்வுகளைக் கொண்டிருந்தால் புதிய சோதனை மற்ற இரண்டையும் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

அதாவது ‘ஸ்பைக் புரதம்’ என்கிற மரபணுவின் முக்கிய பகுதியில் டஜன் கணக்கிலான உருமாற்றங்களைக் கொண்டுள்ள ஒமைக்ரான் மாறுபாட்டை இது கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஹார்மனி பரிசோதனை முறையை வீட்டு உபயோகத்துக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்க விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.