காசோலை வழங்கி தொழிலார்களை ஏமாற்றிய உரிமையாளரைக் கண்டித்து தொழிலார்கள் போராட்டம்
ஆம்பூர் அருகே தொழிலாளர்களுக்கு காசோலை வழங்கி மோசடி செய்த தொழிற்சாலை உரிமையாளரை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன கொம்மேஸ்வரம் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர் இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்கள் குறைப்பு காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைதொகை மற்றும் போனஸ் தொகை உள்ளிட்டவற்றை தொழிற்சாலை நிர்வாகம் தேதி குறிப்பிடாமல் காசோலையாக ( செக்) வழங்கியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சாலை நிர்வாகம் வழங்கிய அந்த காசோலையை தொழிலாளர்கள் வங்கியில் மாற்ற முயன்ற போது வங்கியில் பணம் இல்லாமல் பலமுறை திரும்பியுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடமும் உரிமையாளர் இடமும் இதுகுறித்து பலமுறை முறையிட்ட போது தொழிற்சாலை உரிமையாளர் மிரட்டுவதாக தெரிவித்த தொழிலாளர்கள் கடந்த 3 ஆண்டுகாலமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் இன்று தொழிற்சாலை முன்பு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகதின் தரப்பில் தொழிலாளர்களிடம் சமாதான பேச்சுவாரத்தை மேற்கொண்டு தீர்வு காண்பதாக உறுதி அளித்ததின் பேரில் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.