ஆம்புலன்ஸ் இல்லை.. பேருந்தில் மருத்துவமனை சென்ற கொரோனா நோயாளியால் சென்னையில் பரபரப்பு.!
இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தமிழகத்திலும், குறிப்பாக சென்னையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா சிகிச்சை மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டிலும் கொரோனா சிறப்பு வார்ட் இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையில் ராமபுரத்தில் 43 வயதான ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் வீட்டில் வயதான பெற்றோர்கள் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளமுடியாது என மருத்துவமனைக்குச் செல்ல முடிவெடுத்தார். கொரோனா நோயாளிக்கு ஆம்புலன்ஸ் சேவை இல்லை என மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தில் பயணித்து கிண்டி கிங்கஸ் இன்ஸ்டிட்யூட்டை வந்தடைந்தார். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை உள்ளது என்றும் தவறாக தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோயாளிகள் பலரும் பேருந்தில் பயணித்து தான் மருத்துவமனைக்கு வருகின்றனர்.