பிரதமர் மோடியின் செயல்பாடுகளை பார்த்து அம்பேத்கரே பெருமைப்படுவார் : இளையராஜா புகழாரம்

ilayaraja ambedkar
By Irumporai Apr 15, 2022 09:36 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் செயல்பாடுகளை பார்த்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது.

இந்த புத்தகத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் அவர், "நதி நீர், பாசனம் தொடர்பான கொள்கை முடிவுகளை அண்ணல் அம்பேத்கர் வகுத்தார் என பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக ஒரு செய்தியை நான் படித்தேன்.

2016 ஆம் ஆண்டு முதலீட்டாளர் மாநாட்டில் நதி நீர் மற்றும் பாசனம் குறித்த அமைப்புகள் உருவாக்கப்பட்டதற்கு முக்கிய பங்கேற்றவர் என்பேத்கர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் வளர்ச்சிப்பாதை, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அம்பேத்கரின் கருத்தும் சிந்தனையும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய முயன்று இருக்கிறது.

"மேக் இன் இந்தியா" திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது. இந்தியாவில் சாலைகள், ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில், விரைவு பாதைகள் போன்றவை உலகத் தரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளன. உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைத்ததன் மூலமாக சமுதாயத்தில் பின் தங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சட்டரீதியாக பாதுகாப்பை வழங்கி இருக்கிறார்.

வீடுகள் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்ததுடன் ஏழைகளின் வாழ்க்கையையும் முன்னேற்றி உள்ளார் பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்து இருப்பதால் கிராமபுற பெண்கள் படிப்பை தொடர முடியும்.

இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன.

குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என கூறியுள்ளார்.

இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது.

பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி. இந்த புத்தகம் விடுதலை போராட்ட வீரர்கள் கனவின்படி புதிய இந்தியா எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை தெரிவிக்கிறது.

நம் மண்ணின் சிறந்த மைந்தனின் பெருமையை வெளிக்காட்டுகிறது. இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்