அம்பத்தூர் அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற காரில் ரூ.3.38லட்சம் பறிமுதல் -பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி

money car Ambattur
By Jon Mar 12, 2021 04:14 PM GMT
Report

அம்பத்தூர் அருகே பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பரிசு பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த மாதம் 26ந்தேதி அமலுக்கு வந்தது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்குவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அம்பத்தூரை அடுத்த பாடி- பார்க் ரோடு சந்திப்பில் அம்பத்தூர் தொகுதி நிலையான கண்காணிப்பு படை அதிகாரி மெர்சி அமலோபர்பவர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவு பகுதியை சேர்ந்த கார்த்திக்(40) என்பவரது காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் ரூ.2,70,000/- ரொக்கப்பணம் இருந்தது. அந்த பணத்திற்கு அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என்பது தெரியவந்தது இதனையடுத்து அதிகாரிகள், கார்த்திக்கிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். இதே போல், இன்று அம்பத்தூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கேசவன் தலைமையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவின் பால் பண்ணை சாலையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் சென்னை, நொளம்பூர், ஸ்ரீராம்நகரை சார்ந்த தனியார் கம்பெனி மேலாளர் சிவன் (52) என்பவரிடம் ரூ.67,800/- ரொக்கப்பணம் இருந்தது தெரியவந்தது. மேலும், அவரிடம், அந்த பணத்திற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை இதனை அடுத்து, பறக்கும் படை அதிகாரிகள் சிவனிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர், மேற்கண்ட இரு அதிகாரிகளும் பறிமுதல் செய்த பணத்தை அம்பத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி விஜயகுமாரி மூலமாக அம்பத்தூர் தாசில்தார் பார்வதியிடம் ஒப்படைத்தனர். பிறகு, அவர் அந்த பணத்தை அம்பத்தூர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தார். மேலும் தேர்தல் அதிகாரிகள் கார்த்திக், சிவன் ஆகியோரிடம் நீங்கள் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பெற்று செல்லலாம் என அறிவுரை கூறி அனுப்பினர்.