குஷியில் அமேசான்.. தயக்கத்தில் ரிலையன்ஸ்.. நடந்தது என்ன?
பியூச்சர் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என அமேசான் நிறுவனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பியூச்சர் ரீடெய்ல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருந்துவந்தது. கொரோனா நோய்த் தொற்று வந்தபின் அதாவது, 2020-ல் சுமார் ரூ.7,000 கோடி அளவுக்கு வருமான இழப்பை சந்தித்ததால், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்க 2020 ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் போட்டது

அதன்படி பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பு ரூ.24,713 கோடி என மதிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் பியூச்சர் நிறுவனம் தங்களுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக அமேசான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டது.
அதாவது, பியூச்சர் நிறுவனத்தில் மறைமுகமாக 5% பங்குகள் அமேசான் நிறுவனத்திற்கு இருப்பதால் ரிலையன்ஸுக்கு விற்கும் பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்என சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அமேசான் வழக்கு தொடுத்திருந்தது.
அதே சமயம் பியூச்சர் நிறுவனம் தங்கள் பங்குகளை ரிலையன்ஸுக்கு விற்க முடியாவிட்டால், பியூச்சர் குழுமத்தின் சொத்துகளை விற்றுதான் கடன் செலுத்தவேண்டி இருக்கும். தவிர, 29,000 பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
அதனால் இந்த இணைப்புக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் எனவாதாடியது பியூச்சரினை கோரிக்கையினை ஏற்று டெல்லி உயர் நீதிமன்றம் அமேசான் தொடர்ந்து வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது அமேசான். இந்த வழக்கில் இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கியிருக்கிறது.
இதனால், பியூச்சர் நிறுவனத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இனி இந்த வழக்கு சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் நடக்கும். இந்த வழக்கை எதிர்கொள்ள பியூச்சர் நிறுவனம் சட்ட ரீதியாகத் தயாராகி வருகிறது அதே சமயம் நிறுவனத்தின் மதிப்பும் கணிசமாகக் குறைந்துவருகிறது
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அமேசான் நிறுவனம் குதூகலம் அடைந்துள்ளது அதே சமயம் ரிலையன்ஸ் நிறுவனம்
வாங்கலாமா, கூடாதாஎன தயங்கிப்போயிருக்கிறது.