பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம் - அமித்ஷா வீட்டிற்குள் சென்ற அமரீந்தர் சிங் கார்
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. இந்த மோதல் போக்கின் உச்சமாக தனது முதல்வர் பதவியையே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதன் பின்னர், புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றுக்கொண்டார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்தது என பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வருகின்றது.
இதனிடையே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின் நேற்று டெல்லி சென்ற அமரீந்தர் சிங் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதி செய்யும் விதமாக அமரீந்தர் சிங் மத்திய அமைச்சர் அமித் ஷாவை இன்று சந்தித்து பேசியுள்ளார். ஆனால் இந்த சந்திப்பின்போது விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.