ஜோலார்பேட்டையில் கே.சி.வீரமணி தோல்வி
ஜோலார்பேட்டையில் 3வது முறையாக போட்டியிட்ட கே.சி.வீரமணி தோல்வி.
தமிழக சட்டமன்ற தேர்தலில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற்று திமுக கட்சியினர் வெற்றிப்பெற்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆக தேர்வாகினர்.
இந்த நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணியின் நெருங்கிய உறவினரான தென்னரசு சாம்ராஜ் என்பவர் அமமுக சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணியை எதிர்த்துப் போட்டியிட்டார். அவர் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரங்களைச் செய்யத் தொடங்கினார்.
இதையடுத்து, அமமுக கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களை மூளைச்சலவை செய்த அமைச்சர் கே.சி.வீரமணி, அக்கட்சியைச் சேர்ந்தவர்களைத் தன்வசம் இழுத்தார். இதனால், அமமுக வாக்கும், அதிமுக கூட்டணி வாக்குகளும் தனக்கு எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுக்கும் என அமைச்சர் கே.சி.வீரமணி எண்ணினார்.
இதனால், தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நேரடிப் போட்டி காணப்பட்டது. வாக்குப் பதிவுக்கு முன்பும் சரி, பிறகும் சரி ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணியே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை மக்கள் தவிடு பொடியாக்கியுள்ளனர். முதலில் தபால் வாக்கில் திமுக வேட்பாளர் தேவராஜ் 1,187 வாக்குகளும், அமைச்சர் கே.சி.வீரமணி 949 வாக்குகளும் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 4-ம் சுற்று வரை அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலை வகித்தார். இதனால், அதிமுகவினர் உற்சாகமாகக் காணப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 5-வது சுற்றில் திமுக வேட்பாளர் தேவராஜ் முந்தினார்.
அதன் பிறகு அனைத்துச் சுற்றிலும் அமைச்சர் கே.சி.வீரமணியை ஓரங்கட்டிய திமுக வேட்பாளர் தேவராஜ் இறுதிச்சுற்றில் 1,243 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.