73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக : வரலாற்றை எடுத்துரைத்த முதலமைச்சர்

M K Stalin DMK
By Irumporai May 02, 2022 07:12 AM GMT
Report

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது, மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதன் பின்னர்  திமுகவில் இனைந்தவர்களை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார். அவரது உரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. மக்களுக்காக தொடர்ந்து போராடி, வாதாடி வருகிறோம்.

73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக. 1957-ஆம் ஆண்டு திமுக முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்கியது. முதல் தேர்தலில் 17 இடங்களில் வெற்றிபெற்ற திமுக, 1962 தேர்தலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கட்சியானது.

1967ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது திமுக. திமுக தலைவராக அண்ணா பொறுப்பேற்றபோது அவருக்கு 40 வயது. நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

13 ஆண்டுகளுக்கு பிறகு 1989-ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்தது. 6வது முறையாக 2021ல் திமுக ஆட்சியை அமைத்துள்ளது என்று வரலாற்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.

ஆட்சி என்பது சொகுசாக நாம் வாழ்வதற்கான பதவி என்று நினைக்காமல் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மக்களுக்காக பாடுபட்ட இயக்கம் திமுக. கலைஞர் 25 வயதிலேயே தன்னை திமுகவில் இணைத்து கொண்டு கட்சிக்காக பணியாற்றினார்.

அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. கலைஞர் வாதாடி, போராடி செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்தார். நான் 13, 14 வயதில் சென்னை கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை தொடங்கி பணியை தொடங்கினேன்.

அரசு வேலையில் தமிழர்களுக்குத்தான் வேலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு பணியில் சேருவதற்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பணிக்காக நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை தகுதி தேர்வாகியுள்ளது திமுக.

ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அரசு கோப்புகள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைவிட அதிகமாக இந்த ஓராண்டில் செய்துள்ளோம் என தெரிவித்தார்.