ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய அல்லு அர்ஜூன் - தெறிக்கவிட்ட புஷ்பா படத்தின் வசூல்
விஜய்யின் மாஸ்டர், ரஜினியின் அண்ணாத்த, அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி படங்களின் வசூலை அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் முறியடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள புஷ்பா படம் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இரு பாகங்கள் கொண்ட புஷ்பா படத்தின் முதல் பாகமான இந்த புஷ்பா தி ரைஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றாலும் ஐந்து மொழிகளிலும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.அதன்படி புஷ்பா முதல் மூன்று தினங்களில் உலக அளவில் 173 கோடிகளை வசூலித்து இந்த வருடம் வெளியான இந்தியத் திரைப்படங்களில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
தெலுங்கு மாநிலங்களில் புஷ்பா படத்தின் ஓபனிங்கே அல்லு அர்ஜுன் படங்களில் அதிகபட்சமான ஓபனிங் ஆகும். அதே போல் தமிழ்நாடு, கேரளாவிலும் புஷ்பா படமே அல்லு அர்ஜுன் படங்களில் அதிகம் வசூலித்திருக்கும் படம். வடஇந்தியாவில் புஷ்பாவின் இந்திப் பதிப்பு வெளியாகி முதல் 3 தினங்களில் 12 கோடிகளை வசூலித்துள்ளது. அல்லு அர்ஜுனின் படம் தெலுங்கில் வெளியாகும் அதேநாள் இந்தியில் வெளியானது இதுவே முதல்முறை. முதல் படத்திலேயே அசாதாரணமான வசூலை படம் பெற்றுள்ளது.
புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை அடுத்த வருடம் வெளியிடுகின்றனர். அப்போது முதல் பாகத்தைத் தாண்டி அது வசூலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.