சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.102.93 கோடி ஒதுக்கீடு

minister chief Panneerselvam
By Jon Mar 02, 2021 03:14 PM GMT
Report

சட்டமன்ற தேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததால் வழக்கமான சில முக்கிய செலவினங்களை குறிப்பிடுவது தற்போது உகந்ததாக இருக்காது.

கூடுதல் செலவினங்களை சார்ந்த விபரங்கள் இறுதி துணை மதிப்பீட்டில் உள்ளது. கூடுதல் செலவினங்கள் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள்தான். இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது புதிய விவரங்களோ சேர்க்கப்படவில்லை.

சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது. இதற்கு இந்த மாமன்றம் அனுமதிக்க வேண்டுகிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அதில் தெரிவித்து இருந்தார்.