எங்கள் கூட்டணி வெல்லும்.. கருத்துக் கணிப்புகள் சரியாக வருவதில்லை - அன்புமணி ராமதாஸ்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள் பதிவாகியுள்ளன. அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் காலை முதல் வாக்கு செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் திண்டிவனத்தில் தன் குடும்பத்துடன் வாக்களித்தார்.
இந்தத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிடுகிறது அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ''தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கு தமிழகம் வெற்றி நடை போட எங்கள் அணி நிச்சயம் வெற்றி பெறும்.
கருத்துக் கணிப்புகள் தவறான முன்னுதாரணம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு கருத்துக் கணிப்பு வெளியிடக்கூடாது. தமிழகத்தில் 6.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 30 ஆயிரம் பேரிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. இது 234 தொகுதிகளில் கணக்கிட்டால் 130, 140 பேரிடம் கருத்து கேட்கப்படுகிறது. இது விஞ்ஞானபூர்வமானது இல்லை. கருத்துக் கேட்கப்படும் நபர்கள் யார் யார் எனவும் வெளியிடுவதில்லை. அவர்கள் விவசாயிகளா, அரசு ஊழியர்களா? முன்னேறியவர்களா? பின் தங்கியவர்களா? என எதுவுமே தெரியவில்லை.
ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தற்போது அரசியல் கட்சிகள், கட்சியைச் சார்ந்தவர்கள் ஊடகம் வைத்துக்கொண்டு தங்களுக்கேற்பக் கருத்துகளை உருவாக்கி வருகிறார்கள். 2001 தேர்தல் முதல் கருத்துக் கணிப்புகள் சரியாக வருவதில்லை'' என்றார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாமக தனித்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.