வாய்வழி உறவு தீவிர குற்றமல்ல: தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றத்தின் சர்ச்சை தீர்ப்பு
சிறுவனை கட்டாயப்படுத்தி வாய்வழி உறவு வைத்துக்கொண்ட போக்சோ குற்றவாளிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை குறைத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்படுகிறது. ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்குதில் நீதிமன்றங்கள் இடையே தீர்க்கமான பார்வை இல்லை என்பது சமீபத்திய பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் தெரிய வருவதாக கருத்து எழுந்துள்ளது.
ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போக்சோ சட்டத்தின் கீழ் வராது என்று குற்றவாளி மீது போக்சோவில் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கேந்திவாலா ரத்து செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்தது.
இந்நிலையில், போக்சோ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது சோனு குஷ்வாஹா என்பவர் 10 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி வாய்வழியாக உறவு கொண்டுள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சோனு குஷ்வாஹா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 (அதாவது 'மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமை'), அத்துடன் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 377 (இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள்) மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கியது.
மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமைக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ஆண்டுகள் ஆகும். அதன்படி பிற பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனையுடன் 10 ஆண்டுகள் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அணில் குமார் ஓஜா, சோனு குஷ்வாஹா செய்த குற்றம் மோசமான ஊடுருவும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது என்றும், ஊடுருவும் பாலியல் வன்கொடுமையின் கீழ் வரும் என்று கூறி சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தார். நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.