ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் கருத்து
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது பற்றி முடிவெடுக்க இந்த கூட்டத்திற்கு அழைப்பி விடுக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனால் சிகிச்சைக்கான தேவைக்கான ஆக்சிஜன் தேவை பல மடங்கு அதிகரித்து பல்வேறு இடங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில் தங்களுடைய ஆலையைத் திறந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்க அனுமதிக்குமாறு வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் ஆக்சிஜன் தேவைக்காக தமிழக அரசே எடுத்து நடத்தலாமே என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் தேவைக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகள் கருத்தை கேட்டபின் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.