நாளை உருவாகிறது “அசானி புயல்” : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

asanistorm meteorologicalcenterwarning
By Irumporai Mar 20, 2022 05:09 AM GMT
Report

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் நிகோபர் தீவுகளை நோக்கி நகர்ந்து வருவதால்,அங்கு அதி கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அங்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை புயலாகவும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு ‘அசானி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும்,அசானி புயல் உருவாகவுள்ள நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால்,உடனடியாக கரை திரும்புமாறு மீனவர்களை,இந்திய கடலோர காவல்படை அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில்,ஹெலிகாப்டர் மூலம் சென்று, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.