சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல, தனியார்வசம் ஒப்படைக்க வேண்டும் - கமல்ஹாசன் அறிக்கை
தமிழக அரசியலில் எப்போது தலையாய பிரச்சனையாக இருக்கும் டாஸ்மாக் விவகாரம் தற்போது மீண்டும் உருவெடுத்துள்ளது. கடந்த தேர்தலில் மது விலக்கு பற்றி அனைத்து கட்சிகளும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது டாஸ்மாக் விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்படுவதில்லை.
தற்போது இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி அருகே ஏரல் காவல் ஆய்வாளர் பாலுவை (56) சுமை வேனை மோதவிட்டு கொலை செய்த சம்பவத்தைச் சுட்டிக் காட்டியுள்ள கமல்ஹாசன், இலவச மறுவாழ்வு மையங்கள் அமைப்பதன் அவசியத்தை எடுத்துரைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பட்டப்பகலில் குடித்துவிட்டு பொது இடங்களில் தகராறில் ஈடுபட்ட ஒரு குடிநோயாளியால் கடமை தவறாத காவல் உதவி ஆய்வாளர் பாலு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடிநோயாளியினால் குடும்பத்தில் ஏற்படும் துன்பம் தாங்காமல் அவரது மனைவியும் தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். குடிமைப்பணி அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்தி ஆயிரக்கணக்கான கடைகளைத் திறந்து லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பட்டப்பகலிலேயே குடிக்கும் குடிநோயாளிகளாக மாற்றி இருக்கிறது இந்த அரசு.
சாராயம் விற்பது அரசின் வேலை அல்ல. அது தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விற்பனை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வேண்டிய ஒன்று.
குடியிலிருந்து மீள நினைக்கும் குடி நோயாளிகளுக்கு தரமான இலவச மறுவாழ்வு மையங்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட வேண்டும். எங்கெல்லாம் மதுக்கடைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.